Advertisment

மின் கட்டண உயர்வுக்கு தொடரும் எதிர்ப்பு: கட்டண உயர்வை திரும்ப பெறுமா திமுக அரசு?

தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் நேற்று தமிழக முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
மின் கட்டண உயர்வுக்கு தொடரும் எதிர்ப்பு: கட்டண உயர்வை திரும்ப பெறுமா திமுக அரசு?

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாநில முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க சார்பில் நேற்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மின்சாரக் கட்டணத்தையும், சொத்து வரி உயர்வையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மக்களின் தலையில் இவ்வளவு பெரிய சுமையை சுமத்துவது நியாயமா? மக்களின் வேதனையை புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்று பேசினார்.

சராசரியாக 34% உயர்வு

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மின் கட்டணம் செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வந்தது. 11% முதல் 45% வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (Tangedco) புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவச மின்சாரம். 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.25 ஆகும். 201 - 400 யூனிட்கள் பயன்படுத்தினால் ஒரு யூனிட் ரூ.4.50 செலுத்த வேண்டும். 401 - 500 யூனிட்டுகளுக்கு ரூ.6 செலுத்த வேண்டும்.

மின் கட்டண உயர்வுக்கு முன், 101-200 யூனிட் பயன்பாட்டிற்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2 வசூல் செய்யப்பட்டது. 201-500 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 ஆகவும் இருந்தது. சேவை கட்டணம் ரூ.30 இருந்தது.

அதே வேளையில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 20 லட்சம் இலவச மின் இணைப்புகள் உள்ளன. புதிய மின் கட்டணம் சராசரியாக 34% உயர்தப்பட்டுள்ளது. இது மக்கள் மீது செலுத்தப்பட்ட பெரும் சுமை என்று எடப்பாடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2026-27 வரை ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் கட்டணத்தை உயர்த்தும். 2026 ஆம் ஆண்டுக்குள் மக்கள் சராசரியாக 50% அதிக மின் கட்டணத்தை செலுத்துவார்கள் என்று கூறினார்.

மற்ற மாநிலங்களை விட குறைவு

அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு 23%, ஜெயலலிதா ஆட்சியில் 61% உயர்த்தப்பட்டதுடன் ஒப்பிடுகையில் குறைவு தான்" என்றார். மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இடம்பெற்றிருந்தார்.

மூத்த திமுக தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த மின் கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது. இது அதிமுக அரசின் தவறு. அவர்கள் அவ்வப்போது முறையாக கட்டணத்தை உயர்த்தியிருந்தால் தற்போது இது பெரிய பிரச்சனையாக பார்க்கப்படாது. பாதிப்பு ஏற்பட்டிருக்காது. 8 ஆண்டுகளுக்கு முன்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள மின்சாரத்துறைக்கு மத்திய அரசிடமிருந்து தொடர் அழுத்தம் இருந்தது. முறையான இடைவெளியில் மின் கட்டணம் உயர்த்தப்படாததால், நஷ்டம் ஏற்பட்டு, துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது" என்று கூறினார்.

"மக்கள் வருத்தப்படலாம், ஆனால் கட்டணம் உயர்வு தற்போது குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் பாஜக - அதிமுக கூட்டணி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து சிந்திக்க வேண்டும். 2014 இல் ரூ.400 ஆக இருந்தது, 2022இல் ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று விமர்சித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment