இதனால் என் இரண்டு நாள் பொழப்பு போச்சு : ஆட்டோ ஓட்டுநர் கதிர்

தன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் கதிர் தாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்திருந்த தமிழிசை, அவர் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கதிர், தமிழிசையுடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் கதிர், ‘அக்கா ஒரு நிமிடம்… பெட்ரோல் விலை ஏன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது?’ என்று கேட்டார்.

இதற்கு தமிழிசை, திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். ஆனால், கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை, தமிழிசை உடன் வந்திருந்தவர்கள் ஒரு கைப் பார்த்தனர். அதுவும் தமிழிசை பேட்டி கொடுத்த வீடியோவில் பதிவானது.

ஆட்டோ ஓட்டுநர் பேட்டி:

இந்த சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ‘அந்த ஆட்டோ ஓட்டுநர் குடி போதையில் இருந்தார். இதனால் என்னுடன் வந்தவர்கள் மற்றவர்களின் பாதுகாப்புக் குறித்து கவலையடைந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால், இந்த சம்பவத்தின் போது நான் சிரித்துக் கொண்டிருந்தது போல ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது. மற்றப்படி அப்போது எனக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாது’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும் பாஜக-வினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கதிர் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார் தமிழிசை. மேலும் அவருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இந்த சந்திப்பு குறித்து கதிர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அன்று இரவு நான் தமிழிசையிடம் ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டும் என்று மட்டும் தான் சொன்னேன். அப்போது என்னை யார் தாக்கினார்கள் என்பது தெரியாது. இருட்டாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு என்னைக் காவலர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். என் குடிப் பழக்கம் குறித்து தமிழிசை ஊடகங்களிடம் தெரிவித்தார். அது என் தனிப்பட்ட பிரச்சனை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது கோரிக்கை’ என்று கூறியவர் தொடர்ந்து,

‘தமிழிசை நேற்று என் வீட்டுக்கு வந்து, நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்’ என்று விளக்கினார். அப்போது இந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று கேட்டத்தற்கு, ‘ஒன்னுமில்லை இரண்டு நாள் பொழப்பு போச்சு’ என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close