scorecardresearch

தமிழக உரிமைகளுக்காகப் போராட தன்னாட்சித் தமிழகம்

“தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவான நவம்பர் 1ஐ அரசு விழாவாக கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்” என தன்னாட்சித் தமிழகம் கோரிக்கை.

Thanatchi thamizhagam

“தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவான நவம்பர் 1ஐ அரசு விழாவாக கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்” –பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னாட்சித் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் அமைப்புகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் அறிவுத்துறையினரும் இணைந்து, தமிழ்நாட்டுக்குத் தன்னாட்சி உரிமையைக் கோருவதற்காக, ஒரு புதிய கூட்டியக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தன்னாட்சித் தமிழகம் என்ற பெயரிலான அந்தக் கூட்டியக்கம், தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவான நாளான நவம்பர் 1ம் தேதியான இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தன்னாட்சித் தமிழகம் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆழி செந்தில்நாதன், ஸ்டாலின் சமதர்மன் (மக்கள் இணையம்) துரை.தங்கபாண்டியன், செல்வி(சோஷலிச மையம்), அருள்தாஸ்(பச்சைத் தமிழகம்), அறிவுச்செல்வன் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி), மாணவர் அமைப்பு செயல்பாட்டாளர் செம்பியன் உள்ளிட்டோர் தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

“தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக பல இயக்கங்கள் போராடி வருகின்றன. நீட், சல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஜிஎஸ்டி மூலமாக மாநில வரிவருவாய் இழப்பு, இந்தித் திணிப்பு, ஈழ இனப்படுகொலை, மீனவர் படுகொலைகள், கிழக்குக் கடற்கரையோரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல், காவிரி மேலாண்மை வாரியம், பாலாறு, முல்லைப்பெரியாறு சிக்கல், கீழடி தொல்லியல் அகழாய்வு, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோதல், ஆந்திரத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுதல், கூடங்குளம் அணுவுலை, விவசாய நிலங்களில் கெயில் மற்றும் ஓஎன்ஜிசி எரிவாயுக் குழாய் பதித்தல், நவோதயா பள்ளிகள் மூலமாக மொழித்திணிப்பு உள்பட பல சிக்கல்களில் தொடர்ச்சியான போராட்டங்களால் தமிழகம் கொந்தளித்துப்போயிருக்கின்றது. தனித்தனியான போராட்டங்களாக இவை தோன்றினாலும், இந்த எல்லாப் போராட்டங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, தமிழகம் தனக்கான அரசு உரிமைகளை இழந்திருப்பதே ஆகும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டியக்கமாக போராட முன்வந்திருக்கிறோம்”  என்று ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன் கூறினார்.

“தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கத்தின் முதன்மையான குறிக்கோள் இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து தமிழ்நாட்டின் மாநில தன்னாட்சியை (STATE AUTONOMY)வென்றெடுப்பதே ஆகும். மத்திய அரசு ஓர் உண்மையான கூட்டாட்சியாக (FEDERATION)இருக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் தன்னாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் அதுவே இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான சிறந்த வழி என்றும் இக்கூட்டியக்கம் நம்புகிறது.” என்றும் அவர் கூறினார்.

கூட்டியக்கத்தின் முக்கிய உடனடிக் கோரிக்கைகளும் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர் 1 தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றும் அது அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை கூட்டியக்கம் கோரியது. காஷ்மீர், நாகாலாந்து, கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனிக்கொடியை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கு தமிழறிஞர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சட்ட வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும் என்றும் கூட்டியக்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

2. நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு, எல்லைக் காப்பு தியாகியர் வாரிசுகளுக்கு உதவித் தொகை வழங்குவது, விவசாயத்தை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு உள்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

3. சுற்றச்சூழல் போராளிகள் முகிலனை விடுதலை செய்யக்கோரியும் நதிநீர் இணைப்பு குறித்து நூல் எழுதிய பேராசிரியர் த.ஜெயராமன் மீதான வழக்கை விலக்கிக்கொள்ளக் கோரியும் கூட்டியக்கம் அறிவிப்பு செய்தது.

4. “நவம்பர் 26 மாவீரர் நாள் அன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடிய தமிழக வீர்ர்களான மருது பாண்டியர் – குயிலி வீரம் விளைவித்த மண்ணான காளையார்கோயிலிலிருந்து தன்னாட்சித் தமிழகம் தனது பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது” என்று கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் துரை.தங்கபாண்டியன் தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Autonomous tamils %e2%80%8b%e2%80%8bfight for tamil rights