Advertisment

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்த வட்டாட்சியர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வட்டாட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Avinashi Tahsildar transferred, Tahsildar warns not to sell beef, அவிநாசி, வட்டாட்சியர் பணியிட மாற்றம், மாட்டிறைச்சிக்கு தடை விதித்த வட்டாட்சியர் பணியிட மாற்றம், அவிநாசி வட்டாட்சியர், மாட்டிறைச்சி அரசியல், மாட்டிறைச்சி தடை சர்ச்சை, Tahsildar beef ban controversy, avinashi, tamil nadu, beef ban politics, cpm, Avinashi

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டிய வட்டாட்சியரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அந்த வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்துள்ளது.

Advertisment

இந்தியாவில் 2015ம் ஆண்டு டெல்லி அருகே தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு, மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும் நடந்து வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் நள்ளிரவில் சென்று மாட்டிறைச்சி கடைக்காரரை மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தற்போது வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அப்பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். வேலுச்சாமியின் இறைச்சிக் கடைக்கு இரவு நேரத்தில் வந்த அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியுள்ளார். அப்போது பதிவு செய்யப்பட்ட விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது. இங்கே மாடுகள் வதை செய்வதாக புகார் வந்துள்ளது. அதனால், மாட்டுக்கறி விற்பனை செய்யக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு அவிநாசியில் பல இறைச்சி கடைகள் நடக்கும்போது நான் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று சொன்னால் என்ன சார் என்று வேலுச்சாமி கேட்கிறார். அதற்கு ஒரு தாசில்தார் இந்த நேரத்தில வந்து சொல்றேன்னா நீ பேசிகிட்டே இருக்கற, இங்க புகார் வந்தது அதனால வந்து சொல்றேன். மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கடையை மூடிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் சொல்கிறார்.

அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இரவு நேரத்தில் சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறி மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வட்டாட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

இதையடுத்து, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், வட்டாட்சியர் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதோடு, மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மாட்டிறைச்சி விற்கக் கூடாது எனக் கூறிய அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment