நடிகர் சங்கம் கட்ட தடை நீங்கியது!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதாக தி.தகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து மனுதாரர்கள் சார்பில் அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தபால் நிலையம் இருந்ததாக வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் தபால் நிலையம் இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தபால் அதிகாரிக்கு உத்தரவிட்டனர். அதேபோல், சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலங்களில் தி.நகர் அபிபுல்லா சாலை உள்ளிட்ட இடங்களின் வரைபடங்களை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு, வந்தது.

அப்போது பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து நிரூபிக்க மனுதாரருக்கு பல முறை சந்தர்ப்பம் வழங்கியும், அவர்கள் நிரூபிக்கவில்லை எனக் கூறி, நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close