கார்ட்டூனிஸ்ட் பாலா வழக்கை விசாரிக்க தடை : மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை காவல் துறைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை காவல் துறைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அண்மையில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்டார். கந்துவட்டிக் கொடுமையால் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்து, கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலிச் சித்திரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கார்ட்டூன் தமிழக முதல்வர், நெல்லை போலீஸ் கமிஷனர், நெல்லை கலெக்டர் ஆகியோரை அவமதித்ததாக கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர். பிறகு பாலா ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த அக்டோபர் 23-ந்தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்து வட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்து பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அக்டோபர் 24-ந் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் முதல்வர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி வழக்குப் பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தார்.

இந்த வழக்கின்படி நான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை மாநகர காவல் துறையினருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் நெல்லை மாநகர போலீஸார், நெல்லை கலெக்டர் ஆகியோர் விரைவில் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

 

×Close
×Close