மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை!

மன்னார்குடியில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. வாரத்தின் முதல்நாள் என்பதால் காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் வங்கியில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இந்த வேளையில் சுமார் 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

துப்பாக்கி முனையில் அவர்களை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிய அந்தக் கும்பல், வங்கியில் இருந்த ரூபாய் 6 லட்சமும், வாடிக்கையாளர்கள் அடகுவைத்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களையும் அந்தக்கும்பல் தாக்கியது. கொள்ளையர்கள் சென்ற பின் ஊழியர்கள் அறையை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளனர். இதன்பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதா? என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், வங்கியில் கூட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து, கொள்ளை கும்பல் வந்துள்ளது எனில், அவர்களுக்கு இந்தத் தகவல் எப்படி தெரிந்திருக்கும்? என்ற ஐயம் ஏற்படுகிறது.

மன்னார்குடியில், துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வளவு பெரிய கொள்ளை மன்னார்குடியில் நடந்ததில்லை.

×Close
×Close