Bawaria robbers arrested in Madhya Pradesh: சென்னையில் யாரும் இல்லாத வீட்டில் புகுந்து 120 சவரன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு சொந்த ஊருக்குப் ரயிலில் புறப்பட்டுச் சென்ற பவாரியா கொள்ளையர்களை மத்திய பிரதேசத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
யார் இந்த பவாரியாக்கள்?
கடந்த ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான படம் தீரன் அதிகாரம் 1. இந்த படத்தில்தான் பவாரியா கொள்ளையர்கள் பற்றி காட்டபட்டது. அப்போது வடமாநில கொள்ளைக் கும்பலான பவாரியா பற்றி பேசப்பட்டது. பவாரியாக்கள் என்கிற ஒரு சமூகப் பிரிவினர். இவர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் பரவியிருக்கிறார்கள்.
பவாரியாக்கள் என்பவர்கள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அவர்கள் ராஜபுத்திரர்கள் படையில் முக்கிய வீரர்களாக இருந்தனர். மொகலாய மன்னர் பாபரின் படைகளுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் ராஜபுத்திரர்கள் தோல்வியடைந்தனர். இந்தத் தோல்விக்குக் காரணம் பவாரியாக்கள்தான் என நினைத்த மேவார் ராஜா ராணா சங்கா பவாரியாக்களைத் தாக்கி காட்டுக்குள் விரட்டியடிக்கிறார். பவாரியாக்கள் அன்றிலிருந்து ஒரு காட்டு வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.
அதன்பிறகு, பிரிட்டீஷ் அரசாங்கம் 1871 ஆம் ஆண்டு கொண்டுவந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பவாரியாக்களின் நடவடிக்கை காரணமாக அதில் பவாரியாக்களும் இடம்பெற்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்பட்டது. ஆனால், 1951 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்ற நடத்தை பழக்கமுள்ளவர்கள் சட்டம் பவாரியாக்கள் உட்பட பல குற்றப்பரம்பரையினரை தொடர்ந்து அத்தகைய கண்ணோட்டத்திலேயே அணுகிவருகிறது. இதுதான் பவாரியாக்களின் சுருக்கமான வரலாறு.
இப்படியான வரலாற்றைக் கொண்ட பவாரியாக்கள் காடுகளில் இருந்து வெளியேறி நாட்டுக்குள் வந்தபின், சமூக வாழ்க்கை சூழல் காரணமாக பவாரியாக்களில் சிலர் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் மாறினார்கள். பவாரியாக்களில் சிலர் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு லாரிகளில் சரக்குகளை ஏற்றிவருகின்றனர். சரக்குகளை இறக்கிய பின்னர், நெடுஞ்சாலைகளில் தனிமையில் இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பின்னர் அவர்களைக் கொடூரமாக தாக்கி பணம் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்செல்பவர்களாக பவாரியாக் கொள்ளையர்கள் உள்ளனர். இவர்கள் தாக்குதலின்போது உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர். இப்படியான கொள்ளைக் கும்பலைப் பற்றித்தான் தீரன் அதிகாரம் படத்தில் காட்டப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் படிக்காதவர்கள். சிலர் இப்போதுதான் படித்து தங்கள் சமூகத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
பவாரியாக்களால் கடந்த காலங்களில் தமிழகத்தில் பல கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பவாரியாக் கொள்ளையர்களின் தாக்குதலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சேலம் மாவட்ட காங்கிரஸ் செயற்குழுத் தலைவர் தாளமுத்து நடராசன், திமுக அரசியல்வாதி கஜேந்திரன் போன்ற பிரலபங்களும் இறந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக போலீசார் மேற்கொண்ட பவாரியா நடவடிக்கை மூலம் தமிழகத்தில் பவாரியாக்களின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இப்படியான பின்னணி உள்ள பவாரியாக்கள்தான், சென்னை நங்கநல்லூரில் உள்ள கிராணைட் தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். ரமேஷ் சபரிமலை கோவிலுக்குச் சென்றிருந்ததால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெரிய அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து அ120 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைப் பதிவுகளை சேகரித்தனர். பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததைக் கண்டனர். மேலும், அவர்கள் ரமேஷ் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து வீட்டின் சுவர் ஏறி குதித்ததும் சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்ததைக் கண்டுபிடித்தனர். சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வட மாநில கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப் படுத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அந்த கொள்ளைக் கும்பல் ரமேஷ் வீட்டில் கொள்ளையடித்த நகை, பணத்துடன் பழவந்தாங்கலில் இருந்து எழும்பூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட தமிழக போலீசார் மத்தியப் பிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மத்தியப் பிரதேச உஜ்ஜைனி போலீசார் நகுடா ரயில் நிலையத்தில் வைத்து கொள்ளையர்கள் 6 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச போலீசாரின் வசமுள்ள இந்த கொள்ளையர்கள் பிரபல பவாரியாக் கொளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் தமிழக போலீசார் திகைத்துப்போயுள்ளனர். தனிப்படை போலீசார் தற்போது அவர்களை தமிழகத்துக்கொண்டுவருவதற்காக மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனர்.
தமிழக போலீசாரின் கடுமையான நடவடிக்கையால் பவாரியாக் கொள்ளையர்களின் கதை முடிந்துவிட்டது என்று நினைத்த நிலையில், தற்போது தமிழகத்தில் அவர்கள் கைவரிசை காட்டியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.