மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவனுக்கு மரணம், உரிமைக்காகப் போராடுபவனுக்குச் சிறை! - பாரதிராஜா

உடலைப் பிரேத பரிசோதனை கூட செய்யாமல் பாதுகாப்பாக அனுப்பிய கேரள முதல்வர் பினராயி விஜயனை வாழ்த்துவோம்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் மக்களுக்காகவே மக்களே தேர்ந்தெடுத்து நடத்தும் ஆட்சியே மக்களாட்சி. இன்று தமிழ்நாட்டில் இதற்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

மக்களைச் சிறந்த குடிமக்களாய் உருவாக்குவதை விட்டு விட்டு போராட்டக்காரர்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அடிப்படை உரிமைகளுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அனுதினமும் அச்சுறுத்தல், மத்தியில் ஆளும் ஆட்சி யாளர்களுக்கு கட்டுப்பட்டுத் தமிழர்களின் குரல்வளையை நெரிப்பது எந்த வகையில் நியாயம்?

காவிரி நீர் பிரச்சினை முதல் மீத்தேன் வரை எத்தனையோ மனித வாழ்க்கைக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்துப் பிரச்சினைகளையே பிரபலப்படுத்தி ஆட்சி நடத்துகிறீர்கள்.

பொறியியல் என்ற படிப்பைப் பெட்டிக்கடை போல திறந்து விட்டு, மருத்துவக் கல்விக்கு மட்டும் “அனஸ்தீஸியா” (மயக்க மருந்து) கொடுத்திருக்கிறீர்கள்.

தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு “நீட்” என்ற வேற்று மொழியில் நுழைவுத் தேர்வு காட்டு மிராண்டித்தனமான கட்டுப்பாட்டு விதிமுறைகள். மாணவிகளை மானபங்கப்படுத்தும் பரிசோதனைகள்.

உள்ளூரில் எழுதிய நுழைவுத் தேர்வு இன்று வெளி மாநிலங்களில் எழுதும் அவல நிலை ஏன்? 25 தலை சிறந்த மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது நம் தமிழ்நாடு ஏன் இங்கு தேர்வு மையம் அமைக்க இடமில்லையா?

ஏழை, எளிய மாணவர்கள் வெளி மாநிலங்களில் செலவு செய்து தேர்வு எழுத முடியுமா, மாணவர்கள் கண்ட மருத்துவக் கனவுகளுக்கு ஆரம்பத்திலேயே சாவுமணி அடிக்கிறீர்கள்.

இன்று கேரளாவில் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மன உளைச்சலால் மரணமடைந்து விட்டார். ஐயோ, இதுதான் மக்களாட்சியில் மக்களுக்கு செய்யும் கைமாறா? பாவம், இந்தப் பரிதாபங்களெல்லாம் ஆட்சியாளர்களான உங்களைச் சும்மா விடாது.

அண்டை மாநிலமான பினராயி விஜயனின் கேரள அரசு தமிழக மாணவர்களுக்கு பயண உதவியும், பாதுகாப்பும் செய்து கொடுத்திருக்கிறது. உங்களை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே நீங்கள் எங்களுக்கு செய்ய மறந்தது ஏன்?

இனிமேல் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவனுக்கு மரணம் உரிமைக்காகப் போராடு பவனுக்குச் சிறை. இதுதான் மக்களாட்சியின் தத்துவமா? வேண்டாம் தமிழக அரசே.

இளைஞர்களின் கனவுகளையும் எதிர்கால வாழ்க்கையையும் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுடன் நீங்கள் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு ஆட்சியை வழி நடத்துவது மிகவும் வேதனைக்குரியது. நீங்களும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தானே. அந்த வலியை நீங்கள் உணரவில்லையா?

தன் மகனின் கல்வி லட்சியத்திற்காக அண்டை மாநிலத்தில் உயிர் துறந்த கிருஷ்ணசாமியின் உடலைப் பிரேத பரிசோதனை கூட செய்யாமல் பாதுகாப்பாக அனுப்பிய கேரள முதல்வர் பினராயி விஜயனை வாழ்த்துவோம்.

மத்திய அரசு நம்மை விட்டு விட்டாலும், பொதுச் சேவை செய்ய, எங்கள் தமிழ் மண்ணில் நிறைய போராளிகள் இருக்கிறார்கள்” என்று பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close