Big-Boss Nithya Dheju Interview - மருத்துவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஸ்வேதா ரெட்டி தலைமையில் தேசிய மகளிர் கட்சி சென்னையில் நேற்று உதயமானது. இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கென்று தனியாக உருவாகி இருக்கும் இந்த கட்சியின் தமிழ்நாடு தலைவராக நித்யா தேஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நித்யாவிற்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவருடன் உரையாடினோம்.
இத்தனை கட்சிகளுக்கு நடுவே மீண்டும் ஒரு புதிய கட்சி, அதுவும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக, ஏன்?
இங்க நெறய கட்சிகள் இருக்கு, ஆனா பெண்களை சம உரிமையோடு பாக்குறவங்க எத்தனை பேரு? நாங்க அவர்கள் திட்டத்தில் ஒரு பங்காக இருக்கின்றோமே தவிர முக்கிய அங்கமாக இல்லை. மக்கள் தொகையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கின்றனர்; ஆனால் அரசியலில் மட்டும் அத்தனை பாகுபாடு. அதனால் தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது. இங்கு அனைத்துமே பெண்களின் முடிவு தான். அவர்களோடு மக்கள் தொகையில் நிகராக இருக்கும் நாங்கள் அரசியலிலும் நிகராக இருப்போம்.
பிக்-பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் எப்படி இருந்தது? தமிழ்நாடே உங்களை உற்று நோக்கிய நாட்கள் அது...
பிக் பாஸ் கண்டிப்பா என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்னு. அந்த புகழ் என்ன எல்லார் வீட்டுக்கும் கொண்டு சேர்த்துச்சு. அந்த நிகழ்ச்சி முடிஞ்சு பல மாசம் ஆனா அப்புறம் கூட மக்கள் என்னை மறக்கல. நான் அவங்கள பாக்கும்போது என்ன தங்களுடைய மகளாக பாக்குறாங்க. என் வாழக்கையில் நான் பட்ட கஷ்டங்களை சொல்லி, "நீ தைரியமான பொண்ணு உன்ன மாரி தான் மா என் பொண்ண வளக்கணும்" அப்டினு அவங்க சொல்லும்போது பெருமையாக இருக்கு, அந்த உற்சாகம் தான் அரசியலில் நான் கால் பதிக்க ஒரு உந்துகோள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பொழுது கமல்ஹாசன் உங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார், நிகழ்ச்சி முடிந்து அவரை சந்தித்தீர்களா?
ஓ யெஸ்! கமல் சார் கூட நிறையவே பேசினேன். அவர் நிகழ்ச்சி பொழுதும் சரி அப்புறமும் கூட ரொம்பவே ஹெல்ப் பண்ணினார். அவர் கட்சியில் சேர்வதற்கு அழைப்பு விடுத்தார், முக்கிய பொறுப்பும் எனக்காக இருந்தது.
அப்போ ஏன் மக்கள் நீதி மய்யத்தில் நீங்க சேரல?
எனக்கு கமல் சார் மேல ரொம்ப மரியாதை இருக்கு. அவங்க கட்சி எல்லா விஷயத்தையும் கண்டிப்பா பாப்பாங்க. ஆனா, எனக்கு பெண்கள் முன்னேற்றம் தான் முக்கியம். அது தான் தேசிய மகளிர் கட்சியின் கொள்கையும் கூட, அதனால தான் நான் இங்க பொறுப்பு எடுத்துக்குட்டேன்.
உங்கள் கட்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தலைவர் ஸ்வேதா ரெட்டி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொல்லி இருக்கிறாரார்கள். தமிழ்நாட்டின் தலைவராக நீங்களும் களத்தில் இறங்குவீர்களா?
கண்டிப்பா. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம். நாங்க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 283 இடத்துல போட்டியிடலாம்னு இருக்கோம். தமிழ் நாட்டுல 20 தொகுதில போட்டியிட முடிவு செஞ்சிருக்கோம். எந்த இடங்கள் அப்டினு கூடிய சீக்ரம் அறிவிப்போம். நானும் ஒரு தொகுதியில் கண்டிப்பா நிப்பேன்.
தேசிய மகளிர் கட்சி சென்னையை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் தங்களது கட்சியினை அறிமுகம் செய்ய உள்ளது.