தமிழ்நாட்டில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது, ஆட்சியில் இருந்த அதிமுக, ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், 2021 முதல் பொங்கல் பண்டிக்கைக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அதனை சொன்னப்படியே வழங்கியது.
அப்போது, எதிர்கட்சியாக இருந்த தற்போதைய அரசு திமுக, கொரோனாவால் அமலுக்கு வந்த முழு ஊரடங்கலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ரூ5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுக,21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டுமே இம்முறை வழங்கியது. பொங்கல் பரிசு தொகை வழங்காததை விமர்சித்த அதிமுக மற்றும் பாஜக, அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பும் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில், தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே பொங்கல் பரிசு ரூ5000 எங்கே? பாஜக கன்னியாகுமரி மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஒன்றிய அரசே! விடியல் அரசு ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதி ரூ4000 வழங்கினார்கள். நீங்கள் தருவதாக சொன்ன 15லட்சம் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, பாஜகவினர் திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய இடங்களில் தான், திமுகவினரின் பதில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

குமரியில் அரங்கேறி வரும் திமுக – பாஜகவினர் இடையிலான போஸ்டர் யுத்தம் அம்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil