"லதா ஜி அண்ட் தலைவா" ஜோடி சூப்பர்: ரஜினிகாந்தை சந்தித்த பா.ஜ.கவின் பூனம் மஹாஜன்!

ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார் பூனம் மஹாஜன். இவர், மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் பிரமோத் மஹாஜனின் மகள் ஆவார்

பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியின் சார்பாக சென்னையில் இன்று, கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பா.ஜ.க-வினர் சென்னையில் குவிந்துள்ளனர்.

இதனால், இன்று அதிகாலை முதலே, ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவாக, திங்கட்கிழமை காலையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திருப்புவார்கள் என்பதால், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிலிருந்து பா.ஜ.கவினர் இன்று சென்னை நோக்கி படையெடுத்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தப் பேரணியின் சிறப்பு விருந்தினராக, மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன், தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதில் பூனம் மகாஜன், பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான ‘பாரதிய ஜனதா யுவ மோர்சா’வுக்குத் தலைவராக உள்ளார். இவர், மறைந்த முன்னாள் பா.ஜ.க-வின் முன்னணித் தலைவரான பிரமோத் மகாஜனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பேரணியில் கலந்துகொள்வதற்காக, இவர் நேற்று சென்னை வந்தடைந்தார்.

இந்த நிலையில், பூனம் மகாஜன், நடிகர் ரஜினிகந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பூனம் மகாஜன், “நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி, லதா ஜி அண்ட் தலைவா” எனக் கூறியுள்ளார். அவர்கள் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக பூனம் மகாஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close