குப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கியை நண்பனின் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தினேன் வெடித்துவிட்டது என்று வண்டலூர் அருகே நண்பனை துப்பாக்கியால் சுட்ட விஜய் என்பவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு வேங்கடமங்களத்தில் உள்ள பார்கவி அவென்யூ பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 20), உதயா ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் விஜய்யும் உதயாவும் சகோதரர்கள்.
இந்த நிலையில், முகேஷ் தனது நன்பன் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கே வீட்டின் வெளியே இருந்த உதயாவிடம் விஜய் எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு அவர் விஜய் வீட்டுக்குள்ளே இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்குள் சென்ற முகேஷ் விஜய்யின் அறைக்கு சென்றார். சிறிது நேரத்திலேயே விஜய்யும் முகேஷும் இருந்த அறையில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
இந்த சத்தத்தைக் கேட்ட உதயா உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது, விஜய் தெரியாமல் சுட்டுவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற உதயா சத்தம்போட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முகேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே முகேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் தலம்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அந்த துப்பாக்கி உரிமம் பெறாத துப்பாக்கி என்பதையும் கண்டறிந்தனர். மேலும், போலீசார், விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றியும் விசாரித்துவருகின்றனர்.
இந்த நிலையில், முகேஷை துப்பாக்கியால் சுட்ட விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். துப்பாக்கியால் சுட்ட விஜய் மீது ஏற்கெனவே 2 வழிப்பறி வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டது. நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். அதில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத்தொட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்ததாகவும் அதை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து தீபாவளி பண்டிகையின்போது வெளியே எடுத்தேன். முகேஷ் வீட்டுக்கு வந்தபோது முகேஷ் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியபோது வெடித்துவிட்டது என விஜய் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் விஜய்யை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து விஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் கிடைத்த துப்பாக்கியை நண்பனின் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியதில் வெடித்ததில் இளைஞர் முகேஷ் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.