பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, தயாநிதி மாறன், 2007 இல் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு ( வழக்கு பதிவு) செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றபத்திரிக்கையில், 2004 முதல் 2007ம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்லில் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதித்து, அதி உயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கின் கடந்த ஜூலை ( 2017 ) மாதம் குற்றப்பத்திரிகை நகல் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகவில்லை ஆனால் சன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், தயாநிதி மாறன் தனிச் செயலாளர் கவுதமன், எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார். அப்போது சிபிஜ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தங்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் தேவை. எனவே, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதனையடுத்து நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் (ஜனவரி) தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேலுச்சாமி, பிரம்மநாதன் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகுவதிலிருந்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் வேலுச்சாமி, பிரம்மநாதன், மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.