போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளம் கட்!

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் இதுக்குறித்து கலந்து யோசித்த பின்னரே, அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் 7 நாள் சம்பளத்தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு , ஓய்வூதிய நிலுவைத்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 4 ஆம், தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் பேருந்தில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ – மாணவியர், வெளியூர்களுக்கு செல்வோர் என அனைவரும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன், பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தொர்ந்து 7 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழகத்துக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.

அதன்பின்பு, போராட்டத்தை கைவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 12 ஆம் தேதி பணிக்கு திரும்பினர். இந்நிலையில், நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் கடந்த ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தொகை செலுத்தப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வழக்கத்தை விட குறைவான சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது. இதுக் குறித்து போக்குவரத்து நிர்வாகத்திடம் விசாரித்த தொழிலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில், 7 நாட்கள் சம்பளத்தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் இதுவரை 11 ஆயிரத்து 839 பேருக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், 7 நாள் சம்பளத்தொகை பிடித்தம் குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையீடப் போவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட மத்தியஸ்தரான ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் இதுக்குறித்து கலந்து யோசித்த பின்னரே, அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close