”விதிகளைமீறி செயல்படும் மணல் குவாரி உரிமைத்தை ரத்து செய்யுங்கள்”: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளின் உரிமைத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளின் உரிமைத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுக்க மணல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி போன்ற மொபைல் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி, முசிறியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், நெல்லை, காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத் தலைவர் சுடலைகண்ணு உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,”காவிரி, கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் மணல் குவாரிகளில் பெரியளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகி்ன்றன. இவ்விரு நதிகளிலும் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் காவிரியில் 10 இடங்களிலும், கொள்ளிடத்தில் 14இடங்களிலும் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. மணல் குவாரிகளில் விதிப்படி ஒரு மீட்டர் ஆழத்திலும், 25 ஹெக்டேர் பரப்பளவிலும் மணல் அள்ளப்பட வேண்டும். ஆனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 6 மீட்டர் ஆழத்திற்கும், 75 ஹெக்டேர் பரப்பிலும் மணல் அள்ளப்படுகிறது. விதிகளை மீறி ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் காவிரியும், கொள்ளிடமும் கால்வாய்களை விட பல அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. மேட்டூர் அணையில் இருந்து கட்டளைக்கு 4 நாளிலும், கல்லனைக்கு 5, 6நாளிலும் தண்ணீர் வந்து சேரும். தற்போது மணல் குவாரிகளால் கட்டளைக்கு தண்ணீர் வந்து சேர்வதற்கு 10நாளும், கல்லனைக்கு 20 நாளும் ஆகிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கிணறுகளில் 20 அடியில் தண்ணீர் இருந்த நிலையில் தற்போது 80 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் 2012 வரை மணல் குவாரி மூலம் அரசுக்கு 1028.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே ஆண்டில் டாஸ்மாக் மது விற்பனையில் அரசுக்கு 86,983 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசு மணல் விற்பனையில் நேரடியாக ஈடுபட்டால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும். நேரடி விற்பனையில் அரசு ஈடுபடாததால் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்து மணல் விற்பனையில் கொள்ளை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் மணல் விற்பனையை முறைப்படுத்த மணல் குவாரிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி கே.பத்மநாபன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால் குழு தலைவர் பதவியை நீதிபதி ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிய குழு அமைக்கப்படவில்லை. எனவே மாநில அளவில் மணல் குவாரிகளை கண்காணிக்க சுய அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். எனவே, காவிரி, கொள்ளிடம் நதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவதற்கு தடை விதித்து, தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரியை மூட உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா திருவளர்சோலை மற்றும் கொண்டையாம் பேட்டை பகுதியில் காவிரி நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். அதேபோல கரூர் மாவட்டம் நஞ்சை சொட்டகுறிச்சி பகுதியில் மணல் குவாரிக்கான உரிமையை ரத்து செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மணல் காவிரியின் மூலம் தனது மகன் இறந்துள்ளதாகவும் எனவே உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ராஜசேகர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த அனைத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக மணல் அள்ள ஏற்கனவே இடைக்கால தடை விதித்தனர். மேலும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பாக ஆய்வு குழு அமைத்து உத்தரவிட்டனர். அக்குழுவின் அறிக்கையில், சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுசுழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனயடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுசுழல் பாதிப்படைகுறது. ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த உள்ளனர். கட்டுமானத்திற்கு 9 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது. ஆனால் அரசு 3 ஆயிரம் லாரி மணலை மட்டுமே சப்ளை செய்கிது. இதனால் ஏற்பட்ட மணல் தட்டுபாட்டினால் 1 யூனிட் மணல் வெளி சந்தையில் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எனவே மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விதிகளுக்கு புறம்பாக செயல்படும் குவாரிகளின் உரிமைத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து குவாரிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தி மணல் அள்ளுவதை கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மணல் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி போன்ற மொபைல் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டும். மணல் அள்ளுவதற்கு ஒப்பந்தாரரை ஒழித்து வெளிப்படையான முறையில் டெண்டர் நடத்த வேண்டும் என கட்டுப்பாடுகளை நீதிபதிகள் விதித்தனர்.

காவிரியில் அதிகளவில் மணல் அள்ளியதால் குளிக்க சென்ற மனுதாரரின் மகன் உயிரிழப்புக்கு 8 வார காலத்திற்குள் 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close