சென்னை கொடுங்கையூரில், மழைநீரில் கிடந்த மின்வயரை மிதித்தால் பலியான இரண்டு சிறுமிகளின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரில், தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி கிடந்த மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டதால் அந்த தண்ணீரை மிதித்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர். ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் வசித்து வருபவர் பார்த்திபன். இவருடைய மனைவி அனு. இவர்களுடைய மகள் பாவனா(வயது 7). இவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே அடுக்குமாடி குடியிருப்பு ‘டி’ பிளாக்கை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் யுவஸ்ரீ(9). இவளும், அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில், ராஜரத்தினம் நகர் தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டியில் இருந்து மற்றொரு மின்சார பெட்டிக்கு தரை வழியாக செல்லும் மின்சார வயர், மண்ணில் புதைக்கப்படாமல் சேதம் அடைந்து இருந்தது.
தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் அந்த மின்வயரும் மூழ்கி கிடந்ததால் அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த இரு சிறுமிகளும் கடைக்கு செல்ல முற்பட்ட போது, அந்த தண்ணீரில் இறங்கிய போது, அவர்களை மின்சாரம் தாக்கியது. இருவரும் அலறியடித்து படி சரிந்து விழுந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிகள், சிகிச்சை பலனின்றி உயிரை விட்டனர்.
இதைத் தொடர்ந்து, கவனக்குறைவாக இருந்த காரணத்தினால் 3 மின்துறை அதிகாரிகள் உட்பட எட்டு பேரை சஸ்பென்ட் செய்து மின்துறை உத்தரவிட்டது. மேலும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று கொடுங்கையூர் சென்று, பலியான சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின், அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் . பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பெரு மழை காரணமாக மின்சார கேபிள் அறுந்து விழுந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுமிகளும் உயிரிழந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசுத்துறையில் கவனக்குறைவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவனக்குறைவு என்பதை யார் செய்தாலும், அதை மன்னிக்க முடியாத குற்றமாகத் தான் நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தான், சிறுமிகளின் பலியை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பென்ட் நடவடிக்கை, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்றதொரு சம்பவம் நடக்காத வண்ணம் அனைவருக்கும் பாடமாக அமையும்.
மின்சாரத் துறை வாரியம் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலே செல்லும் கேபிள்களை கூட அண்டர்கிரவுண்ட் கேபிளாக மாற்றி வருகிறது. எனவே, அதிலிருந்து ஒவ்வொருவர் வீட்டிலும் தனித்தனியாக லைன் எடுத்திருக்கலாம். ஆனால், அதை மின்சார வாரியத்திடம் கேட்டு எடுத்திருந்திருக்கலாம். கேட்காமல் தானாக இணைப்புகளை எடுத்துக் கொள்வது தவறு. அதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஏரியாக்கள் தாழ்வான பகுதியாகும். இதனால், இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இருப்பினும், இதுபோன்று தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு வருகிறது” என்றார்.
முன்னதாக, அமைச்சர்கள் பற்றி மீம்ஸ் வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “வேலைவெட்டி இல்லாதவர்கள் தான் அமைச்சர்களை கிண்டல் செய்து மீம்ஸ் கிரியேட் செய்கின்றனர். ஸ்டாலின், தினகரன் ஆகியோர் தனியாக குழுக்கள் வைத்துக் கொண்டு இதுபோன்று செய்கின்றனர். பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வேளைகளில் ஈடுபடுவதில்லை. விமர்சனமும் செய்வதில்லை” என்றார்.