Advertisment

காவிரி விவகாரம்: மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரின் கருத்துகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி விவகாரம்: மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!

காவிரி விவகாரத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில், கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை ஆண்டிற்கு, தமிழகத்திற்கு 492 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, இனி தமிழகத்திற்கு ஆண்டிற்கு 404.1 டிஎம்சி மட்டுமே கிடைக்கும். இந்த தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து கடந்த 19ம் தேதி முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வரும் 22ம் தேதி  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்திற்கு விவசாயிகளையும் அழைக்க தமிழக அரசு அழைத்தது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனர்.

சுமார் 4 மணிநேர ஆலோசனைக்கு பிறகு பேசிய முதலமைச்சர், “காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரின் கருத்துகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வ கருத்துகளை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்”, என உறுதியளித்தார்.

மேலும், “காவிரி பிரச்சனை ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுடன் பிண்ணிப் பிணைந்தது. இதில், கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக உரிமைகளை நிலைநாட்ட பாடுபட வேண்டும்" என்றார்.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் மொத்தம் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்து கட்சியினரும் சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேசவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 177.25 டிஎம்சி நீரை அதிகரிப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினருக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment