காவிரி உரிமை மீட்புப் பயணம் : இன்று தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் பங்கேற்பு

காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் இன்று தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்திருக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து நேற்று (ஏப்ரல் 6) அறிவாலயத்தில் கூடிய திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காவிரிக்காக திருச்சியில் இருந்து ஆரம்பித்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுனர் மாளிகை வரை காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்த அதில் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பயணத்தில் ஒரு குழுவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (7-ம் தேதி) திருச்சி முக்கொம்பில் இருந்து புறப்படுகிறார்கள். இன்னொரு குழுவினர் 9-ம் தேதி அரியலூரில் இருந்து புறப்படுவார்கள்.

மு.க.ஸ்டாலின் இந்த பயணத்தில் பங்கேற்க இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். திருச்சி முக்கொம்பில் இன்று மாலை 2.30 மணிக்கு இந்தப் பயணத்தை ஸ்டாலின் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த தகவல்கள் அடிப்படையில், மாலை 4 மணிக்கே ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்க இருப்பதாக திமுக நிர்வாகிகள் கூறினர்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்தப் பயணத்தை தொடங்கி வைக்கிறார். திருச்சி முக்கொம்பில் புறப்படும் ஸ்டாலின், ஜி.ஏ.புரம், முத்தரசநல்லூர், கம்பரசபுரம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட் வீதி, சர்க்கார்பாளையம், முள்ளக்குடி வழியாக கல்லணையில் முதல் நாள் நிகழ்ச்சிகளை ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.

மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் டெல்டா பகுதியை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட திமுக.வினரும் ஒவ்வொரு பகுதியில் ஸ்டாலினுடன் பயணத்தில் இணைந்துகொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர, முதல் நாள் பயணத்திற்கு விவசாயிகளை பெருமளவில் திரட்டி வர கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடந்தும், சில இடங்களில் வாகனம் மூலமாகவும் இந்தப் பயணத்தை மேற்கொள்வார் என தெரிகிறது. ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் பயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது. சென்னை கிண்டி ஆளுனர் மாளிகையில் ஆளுனரை சந்தித்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மனு அளிக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close