காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர், நடிகைகள் நாளை போராட்டம், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் நேருக்கு நேர்

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரங்களில் தீர்வு கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம் நடத்துகிறது.

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரங்களில் தீர்வு கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம் நடத்துகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வற்புறுத்தி தூத்துக்குடி சுற்று வட்டார மக்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரங்களில் தீர்வு கேட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே ஏப்ரல் 8-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க நடிகர் சங்கம் விரும்பியதாக தெரிகிறது. ஆனாலு முழு நாளும் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்த போலீஸ் அனுமதிக்கவில்லை. மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், தனக்கு உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை என கூறி வருகிறார். எனவேதான் அரைநாள் அறவழிப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விஷால், பிரபு, நாசர், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னணி நடிகைகள் பங்கேற்பார்களா? என்பதை திரை உலகத்தினரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் குதித்திருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த மேடையில் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீப நாட்களாக கமல்ஹாசன் தனது கருத்துகளில் இலைமறைக்காயாக ரஜினிகாந்தை சீண்டி வரும் சூழலில் அவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட பத்திரிகை செய்தி வருமாறு:  ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close