‘என்னை கைது செய்யுங்கள், என் தம்பிகளை விடுங்கள்!’ சீமான் உருக்கம்

காவிரிப் போராட்டத்தில் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள், என் தம்பிகளை விடுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

காவிரிப் போராட்டத்தில் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள், என் தம்பிகளை விடுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம், அண்ணா சாலை பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் மீதும் தாக்குதல் நடந்தது. போலீஸாரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரை காவல் துறையினர் கைது செய்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரை கடந்த 12-ம் தேதி கருப்புக் கொடி போராட்டத்தில் கைது செய்து, முந்தைய கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்க போலீஸார் முயன்றனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் மணியரசன், சுப.உதயகுமரன் உள்ளிட்டவர்களின் போராட்டத்தால் அந்த முயற்சியை அரசு கைவிட்டது.

இந்தச் சூழலில் சீமான் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ‘ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவிரிக்காக போராட்டம் நடந்து வரும் தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என கூறி கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினோம்; இதனால் நாம் தமிழர் கட்சியினர் மீதும், என் மீதும் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியை குற்றவாளி கட்சி போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரை தாக்கிய இளைஞர் நாம் தமிழர் கட்சியே கிடையாது. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு.

காவலர்களை தாக்கியது என் கட்சிக்காரராக இருந்தால் நானே காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பேன். யார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதை காவல்துறைதான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தாக்குதலை விலக்கிவிட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது அறம் சார்ந்ததல்ல. ஏராளமான பொய் வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடரப்பட்டுள்ளது. எந்த அமைப்பு, எந்த கட்சி என்று தெரியாமல் நாம் தமிழர் கட்சி மீது குற்றம் சுமத்துவது தவறானது. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; காவலர்களைத் தாக்குவதற்காகவா நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடும் என் தம்பிகளைக் கைதுசெய்ய வேண்டாம். என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close