காவிரி விவகாரம்: மத்திய அரசின் கெடு முடிந்தது! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!!

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காவிரி குழுவுக்கான வரைவுத் திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு இன்று நிறைவடைகிறது.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைக் கண்காணிக்க தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மார்ச் 29ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கெடு முடிவடைந்தும் மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமாகக் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் முதல் காலக்கெடு முடிவடையும் நேரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குழப்பம் இருப்பதால் “ஸ்கீம்” என்ற வார்த்தை விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து தமிழக அரசும் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் மாநில அரசின் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அந்த விசாரணையில், 6 வாரக் காலக்கெடு அளித்தும் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தது. மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு உடனே செயல்பட தொடங்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறியது. இறுதியாக அன்று வழங்கிய தீர்ப்பில், காவிரி விவகாரத்தில், தமிழகத்தில் அமைக்கப்படும் காவிரி குழுவுக்கான வரைவு திட்டத்தை மே 3ம் தேதி (இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த இரண்டாவது காலக்கெடு இது. ஆனால் இன்னும் காவிரி விவகாரத்தில் தீவிரமாக செயல்படாத மத்திய அரசு மேலும் 2 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வரைவு திட்டம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.

இவ்வாறு நெருக்கடிகள் நிறைந்துள்ள நிலையில், இன்று அந்தக் காலக்கெடு முடிவடைகிறது. இதன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு ஆதரவான ஏதேனும் நல்ல செய்தி வருமா என்பதை காத்திருந்து தான் அறிந்துகொள்ள வேண்டும்.

×Close
×Close