Advertisment

அரசு மைதானங்களில் நடைபயிற்சிக்கும் கட்டணமா? மார்க்சிஸ்ட் கண்டனம்

விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கு அரசு விளையாட்டு மைதானங்களில் கட்டண வசூல் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, cpm, marxist, g.ramakrishnan, charges even for walking in government grounds

விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கு அரசு விளையாட்டு மைதானங்களில் கட்டண வசூல் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு கட்டணங்களை வசூல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் இயங்கி வருகிற விளையாட்டு மையங்கள், பல்வேறு விளையாட்டு திறன்களை வளர்ப்பதற்கு பயன்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போதுள்ள 17 பல்நோக்கு விளையாட்டுக் கூடங்களும், 25 மினி விளையாட்டு அரங்குகளும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. அதே போன்று பொதுமக்களும் இந்த விளையாட்டுத் திடல்களை நடைபயிற்சிக்கும், விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதுள்ள இந்த விளையாட்டு வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, பொதுமக்களுக்கும், இளைய தலைமுறைக்கும் இந்த வாய்ப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்பது விளையாட்டு வீரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு போதிய கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கீடோ, வசதிகளோ செய்து தருவதில்லை.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிரடியாக அரசு விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் மாதம் ரூ. 250/- கட்டணம் செலுத்த வேண்டும்; மாணவ - மாணவிகள் பேட்மிட்டன், கூடை பந்து, செஸ், பாக்சிங், கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு ரூ. 600-லிருந்து ரூ. 1100 வரை கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஸ்டேடியத்திற்கு மாதம் ரூ. 300/-ம் வசூலிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு திடல்களில் கூட ரூ. 300/- கட்டணம் வசூலிக்க ஆணையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழை, எளிய, நடுத்தர மாணவ - மாணவிகளுக்கு தற்போதுள்ள வாய்ப்பையும் பறிப்பதாகவே இந்நடவடிக்கை அமைந்திடும். இந்த மைதானங்களை முதியவர்கள், நோயாளிகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சார்ந்தோர் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு இந்த மைதானங்களை இலவசமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது அநீதியானது.

இதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணம் ஏற்புடையதல்ல. விளையாட்டு மையங்கள் தற்போது நிதியாதாரமின்றி பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் விளையாட்டு என்பது மிக முக்கியமான மனித வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை. இதை அளிக்க வேண்டியது அரசுகளின் மிக முக்கியமான கடமையாக உள்ளது. இதில் லாப நட்டம் பார்ப்பது சரியானது அல்ல.

அனைத்து மக்களுக்கும் விளையாட்டு வசதிகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நிதி ஆதாரத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். மாறாக, மக்கள் மீது கட்டணத்தை திணிப்பது ஜனநாயக விரோதப் போக்காகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக அரசின் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு

ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

Cpm G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment