Advertisment

‘எங்களை வாழ விடாததால் கொலை செய்தோம்'.. சென்னை பாஜக பிரமுகர் கொலைக் குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!

சென்னையில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் வழக்கில், சேலத்தில் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Chennai Bjp Leader Murder case

Chennai BJP leader murder case convicts shocking confession

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). இவர் மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

Advertisment

சரித்திரபதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்த பாலசந்தரனின் பெயர் சில மாதங்களுக்கு முன்பு அப்பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனிடையே பாலச்சந்தர் உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்ததால், அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி, பாலச்சந்தர் சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கர் தெருவில் நின்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பாலமுருகன் தேநீர் அருந்த சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில், 7 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதற்கிடையே, பணியில் கவனக் குறைவாக இருந்ததாக காவலர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீசாரின் முதல் கட்டவிசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 20 குற்ற வழக்குகளில் தொடர்புள்ள முக்கிய ரவுடியான தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் (26), சஞ்சய் (24) ஆகியோர் தங்களின் கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த கலைராஜன் (28), ஜோதி (30) ஆகியோருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பாலச்சந்தரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளின் கைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்துபோது அவர்கள் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் குஞ்சாம்பாளையம் பகுதியிலிருந்து கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும், தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்தி, ஒரு பைக், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் தனிப்படை போலீஸார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குற்றவாளிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான, பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில்செய்து வரும் குட்டி(எ)பழனிசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிசாமி, சென்னையிலிருந்து வந்த நான்கு நபர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு பழக்கமான, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 4 பேரையும் வீட்டில் தங்க வைத்ததாக விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கைதான சகோதரர்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், “பாலச்சந்தரும், நாங்களும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவரது நடத்தை மாறியது. எங்களை போலீஸில் மாட்டிவிட்டு சிறைக்கு அனுப்பினார். எனது தந்தை தர்கா மோகனும் சிறைக்குச் செல்ல காரணமானார்.

கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்து முன், சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தோம். ஆனால், அவர் பிடிகொடுக்கவில்லை. எனவே அவர் இருக்கும் வரை எங்களை வாழ விடமாட்டார் என்ற முடிவுக்கு வந்து, அவரை கொலை செய்தோம்” என பிரதீப், சஞ்சய் இருவரும் வாக்குமூலமாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment