பஸ்களை இயக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அரசு பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் ஆலோசனை பெற்று 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் அரசுக்கு ஆதரவாக கையெழுத்து இட்டுள்ளனர். 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிப்பதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் 81 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகிறது. 2013 முதல் 2016 வரை வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தால், அவர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு மாதம் 2 கோடி ரூபாய் செலவாகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய உயர்வு காரணமாக மாதம் 83 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 684 ரூபாயும், அதிகபட்சமாக 11 ஆயிரத்து 361 ரூபாய் சம்பளமும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். கடந்த ஊதிய ஒப்பந்தத்தின் போது, குறைந்தபட்ச ஊதியம் ஆயிரத்து 468 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 ஆயிரத்து 77 ரூபாயாகவும் இருந்தது. தமிழக அரசு தற்போது அதிகப்படியான ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு அடிப்படை ஊதியமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் வழங்கப்பட உள்ளது. நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படும். நிலுவை தொகை ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 1.9.2017 முதல் 4 மாதங்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் மொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் எங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தில் மட்டும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். 70 சதவீத தொழிலாளர்கள் எங்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர். அனைத்து பஸ்களும் தமிழகம் முழுவதும் முழுமையாக இயக்கப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்புடன் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close