கொள்ளிடம் ஆற்றங்கரையில் எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது? அதை யார் நடத்துகிறார்கள்? என்று குறித்த அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'நாம் மனிதர் கட்சி' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கல்லணையில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மணல் குவாரிகள் முறையான அனுமதி பெறவில்லை என்றும், இதை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதாகவும், ஆனால் திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் அனுமதி மறுத்து விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். எனவே போராட்டம் நடத்துவதை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி. ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்படவேண்டும் என்பதற்காகத்தானே போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கொள்ளிடம் ஆற்றங்கரையில் எத்தனை மணல் குவாரிகள் நடைபெற்று வருகிறது? யார் நடத்துகிறார்கள்? அதெல்லாம் முறையான அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை திங்கட்கிழமை தள்ளிவைத்தார்.