அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை அமர்வில் இருந்து ஒரு நீதிபதி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜி கைது எதிரொலி: மின்சாரம்- மதுவிலக்கு துறைக்கு புதிய அமைச்சர் யார்?
இந்தநிலையில் இன்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவரது கைதில் சட்டவிதிகள் பின்பற்றவில்லை. கைது தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைது தொடர்பாக எந்த ஆவணமும் வழங்கவில்லை. இந்த கைது சட்டவிரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு, பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கும் எனத் தெரிவித்தனர். இந்தநிலையில் விசாரணை தொடங்கும் முன்னரே நீதிபதி சக்திவேல் விசாரணையிலிருந்து விலகியுள்ளார். எனவே மனு மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு, வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும். நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனிடையே, மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil