போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம்

”அறிவித்தவாறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் தொடங்கினால் அதனை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். நீதிமன்றத்தை எதிர்த்து போராட அனுமதி தந்தது யார்?”

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தான் கூறிய கருத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை, கால தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, ஆசிரியர் சங்கங்கள் தொடர ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பள்ளிகளின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களை கடுமையாக சாடினார்.

அப்போது, மாணவர்களின் நலன் கருதியே தான் கருத்துக்களை கூறியதாகவும், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆண்டுக்கு 160 நாட்கள் கூட பள்ளிக்கு வருவதில்லை என்றும், அவ்வாறு பள்ளிக்கு வருபவர்களும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை எனவும் கூறினார். ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என மற்ற ஆசிரியர்கள் புகார் அளிப்பதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் நீதிபதி கிருபாகரன்.

மேலும், பணி செய்யாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்வாறு ஜீரணம் ஆகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் சில போராட்டங்களை அறிவித்தது தமக்கு தெரியவந்ததாகவும், அந்த ஆசிரியர் சங்கங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தார். மேலும், அறிவித்தவாறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் தொடங்கினால் அதனை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என கூறினார். நீதிமன்றத்தை எதிர்த்து போராட அனுமதி தந்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

×Close
×Close