யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கு அதிகாரமா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?

யூனியன் பிரதேச அரசின் ஆவணங்களை பெற ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசின் உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றில் ஆவணங்களை கேட்பதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி யூனியன் பிரதேச ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது; அரசின் ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்டுப் பெறுவது; ஆய்வு சொல்லும் இடத்திலேயே பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பது என மாநில அரசின் அதிகாரங்களில் துணைநிலை ஆளுநர் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுப்பிய புகாருக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை கேட்க புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று 2017 ஜனவரி 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு வராததால், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க மூன்று வார அவகாசம் கோரினார்.

இதை ஏற்றுக்கொண்டு, மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

×Close
×Close