தமிழக அரசின் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்தின் டெண்டருக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்தின் கீழ், 1 லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்க தமிழக அரசு ஒப்பந்த புள்ளி கோரியது.
அரசு, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு ஒப்பந்த புள்ளிகளை வழங்கும் வகையில் நிபந்தனைகளை வகுத்து உள்ளதாக கூறி, இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரபிக் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெண்டருக்கு விண்ணப்பிக்காத மூன்றாவது நபர், டெண்டருக்கு தடை விதிக்க கோர முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.