நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்

நாட்டின் மிகப்பெரிய கவிஞரின் பெயரால் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வி துறை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி மனுத் தாக்கல் செய்ததையடுத்து, கைது ஆணையை திரும்பப் பெற்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை விதிக்கக் கோரி தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தொலைதூர கல்வி மையங்கள் இயக்கப்பட மாட்டாது என, பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம், தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறும் வகையில் தொலைதூர கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து, பல்கலைக் கழக சிண்டிகேட் குழு நவம்பர் 28 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, பல்கலைகழகத்தின் இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் கடந்த மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறியும், தடை உத்தரவை மீறியும் நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், கல்வியாண்டு இடையில் தொலைதூர கல்வியை துவங்க எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது? என்பது குறித்து சந்தேகம் எழுப்பிய நீதிபதி, மாணவர்கள் நலனுக்கு முரணாக செயல்பட்ட உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கல்லூரி கல்வி இயக்குனர் ஆர்.சாருமதி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை
ஆகிய எட்டு பேரையும் ஜனவரி 7 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி கல்வி இயக்குனர் ஆர்.சாருமதி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் ஆஜரானார்கள்.

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா மட்டும் ஆஜராகவில்லை.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், உயர்கல்வி துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மாக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடி ஆணை பிறப்பிப்பதாகவும் அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து கைது ஆணையை திரும்ப பெறக் கோரி உயர்கல்வித் துறை செயலாளர் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்கல்விதுறை செயலாளர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அப்போது நீதிபதி,
இந்த நீதிமன்றத்திற்கு பல்வேறு பிரச்சினை தொடர்பான வழக்குகள் இருக்கலாம். ஆனால் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் நீதிமன்றத்திற்கு இல்லை. நாட்டின் மிகப்பெரிய கவிஞரின் பெயரால் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும் முன்னாள் துணைவேந்தர் கைது உட்பட அனைத்தும் தெரியும் என தெரிவித்தார்.

இந்த மாநிலத்தில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் அதிகமான பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் கல்வியின் தரம் குறைவாக உள்ளதாகவும், நாம் வெறும் பொறியியல் மாணவர்களை தயாரித்து வருகின்றோமே தவிர இன்னும் பொறியாளர்களை உருவாகவில்லை எனவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.

(யூஜிசி) பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை முறையாக அனைத்து பல்கலைக் கழகங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பல்கலைக் கழகங்கள் பின்பற்ற தவறினால் அது கல்வியின் தரத்தை தான் பாதிக்கும் எனவும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் கல்வி நிலையங்கள் செயல்படுவதன் மூலமாக கல்வியின் தரம் பாதிக்கும். இதனால் எதிர்கால சந்ததியினரை இது பாதிக்கும். அவர்களுக்கான கல்வியை தடை ஏற்படுத்தும் இந்த விஷயத்தில் எந்த விதத்திலும் நீதிமன்றம் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் அனைத்து விதிகளையும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பின்பற்றுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், எதிர்கால சந்ததியினரை நாம் உரிய முறையில் கல்வியில் மேம்படுத்துவதை செய்யத் தவறிவிட்டோம் என்பதே பொருளாகும் என தெரிவித்தார்.

தற்போது பல்கலைக்கழகங்களில் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயத்தில் உள்ளது எனவும் அதற்கு உரிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நீதிமன்றங்களில் அதிகளவு அவமதிப்பவர்கள் வருவதாகவும் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் இவ்வாறு பின்பற்றாத காரணத்தால் தான் அவமதிப்புகள் அதிகளவில் வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? நீதிமன்ற உத்தரவால் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் முறையாக பின்பற்றப்படுகிறது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, தொலைதூர கல்வி மையங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் குழுவின் கூட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளபட்டதா? எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்களையும் இந்த கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் விசாரணையை ஜனவரி 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அடுத்த விசாரணையின் போது உயர்கல்வித் துறைச் செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close