காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

கண்காணிப்பு கேமராக்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டதா என டிஜிபி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவல் நிலையங்களில் இன்னும் ஏன் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை அளிக்க டி.ஜி.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்து பிரச்சனை தொடர்பாக சிவில் நிதிமன்றத்தில் உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாகவும் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் இலமுகிளன் உள்ளிட்ட இரண்டு வழக்கறிஞர்கள் கடந்த மாதம் நேரில் சென்றனர். அப்போது எதிர் தரப்பினரும் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். இருதரப்பினர் இடையே அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மற்றோரு தரப்பினர் இலமுகிளனை காவல் ஆய்வாளர் முன்னிலையிலேயே தாக்க முற்பட்டதாகவும் இதனை காவல் ஆய்வாளர் தடுக்காமல் இருந்தாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் இளமுகிலன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், இச்சம்பவம் வேளச்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அறையில் நடைபெற்றதாகவும் எனவே அங்கு நடந்த சம்பவம் சிசிடிவியில் பதிவானதாகவும் எனவே தாக்கமுற்பட்டவர்கள் மீதும் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு விசாரித்த நீதிபதி கிருபாகரன், அப்போது அரசு வக்கீலிடம் சிசிடிவி ஆதாரம் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஆதாரம் எங்கே?  இருந்தால் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், சிசிடிவி வீடியோ ஆதாரம் இல்லை என தெரிவித்தார். அப்போது நீதிபதி வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யவில்லை என்றால் டி.ஜி. பி அல்லது சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (17.07.2017) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் எதுவும் தற்போது இல்லை என தெரிவித்தார். அப்போது நீதிபதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதா என்பது குறித்து எஸ்.பி.-க்களும், துணை ஆணையர்களும் ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி, கண்காணிப்பு கேமராக்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டதா என டிஜிபி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏன் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை? அது தொடர்பாக ஏன் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர கூடாது? என கேள்வி எழுப்பினார்.  இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
×Close
×Close