ஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரிய மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு!

கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் வரும் 20 ஆம் தேதிக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பெரியார் சிலைகளை அகற்றப்படும் எனக் கூறிய பா.ஜ. தேசிய செயலாளர் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிய உத்தரவிடக் கோரி மனு மீது பதில் அளிக்க, விழுப்புரம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. ராஜாவின் கருத்து தமிழகத்தில் வன்முறையை தூண்டி விட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார்.

அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இரு பிரிவினரிடையே வன்முறையை, விரோதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது எனவும், அந்த அடிப்படையில் தான் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்கு பதிய போலீஸார்க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு, மனு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் வரும் 20 ஆம் தேதிக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close