சிடிஎஸ் நிறுவனம் 420 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு

420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த சிடிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

2800 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் முதல் தவணையாக 420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-17 நிதியாண்டில் வருமானத்தை குறைத்து காட்டி 2800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக சி டி எஸ் நிறுவனம் மீது புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு அந்நிறுவனத்திடம் இருந்து உரிய விளக்கம் கிடைக்காததால், அந்நிறுவனத்தின் 68 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதனை எதிர்த்து சிடிஎஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி துரைசாமி , அந்நிறுவனம் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான விதிகளை பின்பற்றாமல் தங்களுடைய 68 வங்கி கணக்குகள் கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சி டி எஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, சிடிஎஸ் நிறுவனத்தின் முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் , அதன் மூலம் முதல் தவணையாக 420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு அந்நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மீதமுள்ள தொகைக்கு நிறுவனத்தின் மற்ற முதலீடுகளை உத்தரவாதங்களாக 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

×Close
×Close