சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பு நகரமா?

ஒரு மணி நேரத்துக்கு 26 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன

கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், சென்னை நகரம் உண்மையாகவே , பெண்களுக்கு பாதுகாப்பு நகரம் தானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, பள்ளிகரணையில் பெண் மென்பொறியாளருக்கு நேர்ந்த கொடுமை, வேலைக்கு செல்லும் பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.சம்பவதன்று, வேலை முடிந்தது தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

பெரும்பாக்கம் – தாளம்பூர் சாலையில் அவர் பயணித்த போது, அவருடைய வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்துள்ளனர். ஆபத்தை சுதாகரித்துக் கொண்ட அந்த பெண், உடனடியாக தனது வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார். அக் கணமே, அந்த பெண்ணின் தலையை தாக்கி நபர்கள், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு, கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, செல்ஃபோன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் விடிந்த பின்பே, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில் சம்பந்தப்பட்டுள்ள நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றன.

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறு வன்முறை குறித்து, ஒரு மணி நேரத்துக்கு 26 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமில்லாமல், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பெருகிக் கொண்டே வருகிறது.

இதுக் குறித்து பேசியுள்ள வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “ உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகயுள்ளது. இந்த குற்றத்திற்கு சமுதாயமே காரணம் என்று கூறுபவர்களை விட, பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுபவர்கள் தான் அதிகம். ஐடி நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்களின் பாதுகாப்பை அந்த நிறுவனமே உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும்.

தங்கள் நிறுவனத்தில் பணிப்புரியும் பெண்கள், பாதுகாப்பாக வீடு செல்லும் வரை முழு பொறுப்பு அந்த நிறுவனத்தைச் சாரும். இதை அந்தந்த நிறுவனங்கள் உணர்ந்தாலே பெருவாரியான குற்றங்கள் தடுக்கப்படலாம். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு நகரம் என்ற பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பெற்றது. ஆனால், சமீப காலமாக பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களை பார்த்தப்பின், சென்னை அந்த பெயரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ” என்று கூறியுள்ளார்.

×Close
×Close