Advertisment

கணினி முதல் கருவாடு வரை; சாமான்ய மக்களின் சூப்பர் மார்க்கெட் - பல்லாவரம் சந்தைக்கு சென்றதுண்டா?

கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாக குறையாத நிலையில், வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களின் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Pallavaram Friday Market

Janani Nagarajan

Advertisment

Chennai Pallavaram Friday Market : பல்லாவரத்தில் பிரபலமாக நடக்கும் இந்த சந்தையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் மக்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். சென்னையில் இதுபோல் சந்தைகள் அங்கங்கே வைத்தாலும் இந்த சந்தை மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுகிறது என்று தான் கூறவேண்டும்.

"நாங்கள் கடப்பாக்கம், பாண்டிச்சேரியிலிருந்து வருகிறோம்; எங்கள் ஊரில் விளையும் தேங்காய்களை இங்கு கொண்டு விற்பனை செய்கிறோம்; நாங்கள் ஒரு பத்து பேர் சேர்ந்து ஒரு வண்டி பிடித்து வாரம்தோறும் இங்கு வருகிறோம்; இங்கு விற்பனையகம் போடுவதற்கு 500 ரூபாய் கட்ட வேண்டும்; இத்தனை செலவு செய்து, இவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும், எங்கள் வியாபாரத்தில் சரிவு வருவது அரிதே. நாங்கள் கொண்டு வந்த எல்லா பொருட்களையும் விற்றுவிட்டு மனநிம்மதியுடன் தான் வீடு திரும்புவோம்" என்று கூறித் தனது வியாபாரத்தை தொடர்ந்தார் தேங்காய் வியாபாரி.

publive-image

Chennai Pallavaram Market Express Photo by Janani Nagarajan

நூறு வருடங்கள் வரலாற்றைக்கொண்ட பல்லவபுரத்தின் (பல்லாவரத்தின்) சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறினால் மிகையாகாது; காய்கறிகளில் இருந்து வீட்டிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இங்கு மலிவான விலையில் வாங்கலாம்.

"எங்கள் விற்பனையகத்திற்கு தேவையான பொருட்களை ரிச்சி ஸ்ட்ரீட்டிலும், சில எலக்ட்ரானிக் கடைகளிலும் வாங்கி வருகிறோம்; சில கைபேசிகள் வேலை செய்யும், சில கைபேசிகள் வேலை செய்யாது, எல்லாவற்றையும் வாங்குவதற்கு மக்கள் வருவார்கள், இங்கு வேலை செய்யாத பொருட்கள் கூட பயன்படும்" என்றார் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்பவர்.

இங்கு பொருட்கள் மட்டும் இல்லாமல், விதவிதமான அழகழகான செடிகள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் விலைக்கு வாங்கலாம்.

publive-image

எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்டுகளை விற்பனை செய்யும் இளைஞர் (Chennai Pallavaram Market Express Photo by Janani Nagarajan)

"இங்கு சிருவெடை கோழிகள், இரண்டு 600 ரூபாய்க்கு விற்பனைக்கு செய்கிறோம், எல்லா வகை கோழிகளும் பண்ணையிலிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வோம். மிகவும் சுகாதாரமான முறையில் கோழிகளை நாங்கள் பராமரித்து இங்கே விற்பனைக்கு வைப்போம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சமீப காலங்களில் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளது" என்றார் கோழி வியாபாரம் செய்பவர்.

சென்னை மக்கள் மத்தியில் பிரபலமாக இந்த சந்தை பற்றின செய்திகள் வளர்ந்து வந்தாலும், சமீப காலமாக கொரோனா பெருந்தொற்றினால் மக்களின் வருகைகள் குறைந்ததை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாக குறையாத நிலையில், வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களின் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

சந்தையில் வாங்கும் வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டபொழுது:

"நான் இங்கு 7 வருடங்களாக வாரம் தவறாமல் பல்லாவரம் சந்தையில் பொருட்கள் வாங்கி வருகிறேன்; இங்கு காய்கறிகள் வாங்கினால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்; உண்ணக்கூடிய பொருட்கள் அனைத்தும் சுத்தமாக, தரமாகத்தான் கிடைக்கிறது; மற்ற பொருட்களின் தரத்தை நாம் நன்கு ஆராய்ந்தே வாங்க வேண்டும்"

publive-image

பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கண்கவர் பொம்மைகள் (Express Photo by Janani Nagarajan)

பல்லாவரம் சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மலிவாக இருக்கின்றது என்று எல்லாவற்றையும் நம்பிவிடுவது கடினமாக இருந்தாலும், பொதுமக்களிடம் விலையுயர்ந்த பொருட்கள் பயன்பாட்டிற்கு வருவது அரிதாகவே இருக்கின்றது. அவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இங்கு பொருட்கள் வாங்கி உபயோகிப்பது சாமர்த்தியத்தனமாகவும் தென்படுகிறது. இதுவே இந்த சந்தை இவ்வளவு பிரபலமாக மக்களின் மத்தியில் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment