அடுத்த இரு தினங்களுக்கும் மழை நீடிக்கும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு முழுவதும் இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை:

வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரமே ஊட்டி போல் தோன்றுகிறது.

மேலும் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், 4வது நாளாக நேற்று கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரவு கனமழை பெய்தது.

இதனிடையே, மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாலும்,தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாலும் தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் :

கடந்த 3 தினங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் செய்துயாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும்.

இதன்காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த காற்று அதாவது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். நாளை 65 முதல் 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19, 20 தேதிகளிலும், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்; சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சிலமுறை மிதமான மழையும் பெய்யக்கூடும். மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி வலுப்பெற்று ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செல்வதால் இதனால் தென்தமிழகத்தில் மழை இல்லை.” என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close