Advertisment

பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரி!

பால் லாரி ஓட்டுவதற்கு தலைக்கவசம் போட வேண்டும் என்கிற விதிமுறையை உலகிலேயே உருவாக்கிய முதல் காவல்துறை நமது தமிழ்நாடு காவல்துறையாகத் தான் இருக்க முடியும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரி!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "சென்னை வேளச்சேரி மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சங்க நிர்வாகிகளை இன்று(புதன்) பிற்பகல் சுமார் 2.00மணியளவில் நேரில் சந்தித்து முடித்து விட்டு நானும் எங்களது சங்கத்தின் மாநில பொருளாளர் திரு. எஸ்.பொன்மாரியப்பன் அவர்களும் அண்ணாசாலை வழியாக அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகம் நோக்கி திரும்பி கொண்டிருந்தோம்.

நல்ல வெயிலில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நாக்கு வறண்டு விட அண்ணாசாலை கோபாலபுரம் சந்திப்பில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தி விட்டு தலையெல்லாம் வியர்வையாக இருந்த காரணத்தால் தலைக்கவசத்தை வாகனத்தில் பின்னால் இருந்த மாநில பொருளாளரிடம் கொடுத்து விட்டு வாகனத்தை ஓட்டினேன்.

அண்ணா மேம்பாலம் கீழே உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் எங்களையும் சேர்த்து தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சுமார் ஐந்து வாகன ஓட்டிகளை நிறுத்தினார். எங்களிடம் வாகன பதிவு புத்தகம், வாகன காப்பீடு, அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் தலைக்கவசம் அனைத்தும் சரியாக இருந்தும் அந்த இடத்தில் தலைக்கவசத்தை அணியாமல் வந்தமைக்காக போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. எம்.சேகர் அவர்கள் 100.00ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றார். ஆனால் மற்ற இரண்டு வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் 1500.00ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பேரம் பேசி தலைக்கு 200.00ரூபாய் வாங்கி கொண்டு அதற்கான ரசீது வழங்காமல் வாகனத்தை விடுவித்து விட்டனர்.

நாங்கள் சற்று முன் தான் தலைக்கவசத்தை கழற்றினோம் எனக் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் 100.00ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு அதற்கான ரசீதை பெற்றுக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்த பிறகு சந்தேகத்தின் பேரில் அந்த ரசீதை எடுத்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் அந்த ரசீதில் நாங்கள் ஓட்டி வந்தது MILK LORRY என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு வாகன ஓட்டுனர் உரிமம் எண். 000000000000 என மொத்தம் 12பூஜ்யங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததோடு தலைக்கவசம் இல்லாததற்கு என்பதை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி குறிப்புகள் பக்கத்தில் எந்த இடத்தில் எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

எங்களது இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து அதற்கான அபராதத்தை செலுத்துவதற்கான ரசீதில் பால் லாரியை தலைக்கவசம் இல்லாமல் நாங்கள் ஓட்டி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். பால் லாரி ஓட்டுவதற்கு தலைக்கவசம் போட வேண்டும் என்கிற விதிமுறையை உலகிலேயே உருவாக்கிய முதல் காவல்துறை நமது தமிழ்நாடு காவல்துறையாகத் தான் இருக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி கொடுத்த ரசீதையும் அவர் இணைத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment