ஆப்பிள் ஐபோனுக்காக தந்தையின் காரை திருடச் சொன்ன இளம்பெண் : போலிஸில் சிக்கிய ஃபேஸ்புக் தோழன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழி ஒருவருக்காக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தோழியின் தந்தையின் காரையே திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் அறங்கேறியுள்ளது.

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழி ஒருவருக்காக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தோழியின் தந்தையின் காரையே திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. தோழியின் தந்தையின் காரை திருடி தோழிக்கு விலையுயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சந்துரு (28). இவரை நேற்று முன்தினம் சென்னை கோடம்பாக்கம் காவல்நிலைய போலீசார் கார் திருட்டு வழக்கில் கைது செய்தனர். அந்த காரை அவரது வீட்டில் வைத்து போலீசார் மீட்டனர்.

போலீசார் விசாரணையில், இச்சம்பவம் குறித்து ருசிகர தகவல் வெளியானது. போலீசார் விசாரணையில் அவர் கூறியதாவது, ”நான் ஃபேஸ்புக் மூலம் பிரியா  (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் நண்பனானேன். அவர் தொழிலதிபரின் மகள் ஆவார். அதனால் அவர் ஆடம்பரமாக செலவு செய்வார்.  இதற்கு, அவரது பெற்றோர் கட்டுப்பாடு விதித்தனர். ஆப்பிள் செல்ஃபோன் வாங்க அவரது தந்தை மறுத்துவிட்டார்.

ஆனால், ஆப்பிள் செல்ஃபோன் வாங்க வேண்டும் என்பதில் பிரியா உறுதியாக இருந்தார். அதனால், தன் தந்தையின் காரை திருடி, அதனை விற்று வரும் பணத்தின் மூலம் செல்ஃபோன் வாங்க திட்டமிட்டார். அவரது தந்தையின் கார் சாவியை என்னிடம் தந்து திருடுமாறு கூறினார். ஆனால், நான் முதலில் பயந்தேன்.

காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என அவரிடம் கேட்டேன். அதற்கு, காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் எனக்கு தைரியம் அளித்தார்.

இதனால், தைரியத்துடன் அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை, அவர் அளித்த சாவியை பயன்படுத்தி திருடினேன். திருடிய காரை என் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தேன். காரை விற்று பணமாக்கும் பொறுப்பையும் பிரியா என்னிடம் ஒப்படைத்தார்.

காரை விற்பதற்கு எனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் விலை பேசி வந்தேன். ஆனால், அதற்குள் அவரது அப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டனர். காவல் துறையினரிடம் சிக்கி விட்டேன்”, என கூறினார்.

ஃபேஸ்புக்கில் அறிமுகமான தோழிக்காக ஒருவர் திருடனாகியிருக்கிறார். தனது ஆடம்பரத்திற்காக மற்றொரு இளைஞரை அப்பெண் பயன்படுத்தியிருக்கிறார். முன்பின் பார்க்காதவர் திருட சொல்கிறாரே என சற்றும் யோசிக்காமல், திருடிய அந்த இளைஞர் இப்போது திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close