பழனிசாமி 'கேம்' ஸ்டார்ட்; அனைத்து அமைச்சர்கள் அறையிலும் முதல்வர் படம் 'கட்டாயம்'!

இதுநாள்வரை அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்த தலைமைச் செயலகத்தில்....

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டிடிவி தினகரன், நேற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். இதற்கிடையில், நேற்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்கள் யாரும் தினகரனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஏப்ரல் 17-ஆம் தேதி எடுத்த முடிவின் படி, தினகரன் கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டும்” என்றார்.

இதற்கடுத்து பேட்டியளித்த தினகரன், “பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆணைப்படி, இ.பி.எஸ். அணிக்கு இன்னும் 60 நாட்கள் நேரம் கொடுக்கிறோம். அதற்குள் அவர்கள் கட்சியை இணைத்துவிட்டால் நல்லது. இல்லையேல், என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்” என்றார்.

இந்நிலையில், இதுநாள்வரை அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்த தலைமைச் செயலகத்தில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படமும் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் அறைகளிலும் எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வரின் படம் வைக்கப்படுவது பொதுவான நிகழ்வு என்றாலும், தினகரனின் ’60 நாள் கெடு’ அறிவிப்பிற்கு பிறகு, அவசர அவசரமாக எடப்பாடி படங்கள் வைக்கப்பட்டுள்ளது, தினகரனுக்கு விடுக்கும் சவாலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை அடையாறில் தினகரனை மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மற்றும் பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா ஆகியோர் தினகரனை சந்தித்துள்ளனர்.

×Close
×Close