மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீசனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி!

ஜெகதீசனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

நெல்லையில் மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீசனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஜெகதீசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், ”திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலையத்தில், தனிப்பிரிவு முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த செபஸ்டியன் என்பவரின் மகன் ஜெகதீசன் துரை 6.5.2018 அன்று பணியிலிருந்த போது, டிராக்டர் வாகனத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல்நிலை காவலர் ஜெகதீசன் துரையின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

கடமை உணர்வுடன் பணியாற்றிய போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த முதல்நிலைக் காவலர் ஜெகதீசன் துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும், கடமையாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்த முதல் நிலைக் காவலர் ஜெகதீசன் துரையின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close