Advertisment

கொரோனா இறப்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை - முதல்வர் பழனிசாமி பேட்டி

கொரோனா இறப்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு எந்த பலனும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா இறப்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை - முதல்வர் பழனிசாமி பேட்டி

கொரோனா இறப்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு எந்த பலனும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை கூறினார்.

Advertisment

சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி உரையின் முடிவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

கொரோண மரணத்தில் வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்களே?

கொரோனா மரணத்தில் என்ன வித்தியாசம். மக்கள் கொடுக்கிற புள்ளிவிவரத்தை வைத்து நாங்கள் கொடுக்கிறோம். இன்றைக்கு அரசாங்க மருத்துவமனையில் இறப்பவர்களின் இறப்பு கணக்கு தெரிக்கிறது. இன்றைக்கு தனியார் மருத்துவமனையில் கிடைக்கின்ற செய்தியை வைத்து நாம் அறிவிக்கிறோம். கொரோனா இறப்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை. இறப்பை யாரும் மறைக்கவும் முடியாது.

கொரோனா இறப்பை குறைத்து சொல்வதாக சொல்கிறார்களே?

அதுதான் கொரோனா இறப்பை எப்படி குறைக்க முடியும்? இறந்தால் அங்கே யாரும் போவதில்லையே. யாராவது இறந்தால் பத்திரிகையாளர்கள் உடனே காட்டிவிடுகிறீர்ள். இன்றைக்கு வேறு எந்த மரணமாக இருந்தாலும் பிரச்னை கிடையாது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தார் என்றால் அத்தனை மக்களுக்கும் தெரிந்துபோய்விடும். இதை மறைக்கவே முடியாது. ஏனென்றால், யாருமே அங்கே போவதில்லை. அதனால், கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு எந்தவித நன்மையும் கிடையாது. இது எல்லாமே வெளிப்படைத் தன்மை. தினந்தோறும் நாங்கள் அறிவிக்கிறோம். இன்றைக்கு நம்முடைய சுகாதாரத்துறையின் மூலமாக, நாள்தோறும் இவ்வளவு பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், எவ்வளவு பேர் குணமடைந்து இருக்கிறார்கள், எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள், எவ்வளவு பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் எல்லாமே தெளிவுபடுத்துகிறோம். ஒளிவுமறைவு இல்லாமல் நாங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறோம். தினந்தோறும் அறிவிக்கிறோம்.

பரிசோதனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? மற்ற மாவட்டங்களில் பரிசோதனை இல்லை என்கிறார்களே?

இதுவரை மொத்தம் 6 லட்சத்தும் 9 ஆயிரத்து 856 பேருக்கு பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிகமான பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடுதான். அதுமட்டுமல்லாமல், மொத்த கொரோனா பாதிப்பு 36,841. நேற்றைய தினம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் 17,675 எடுக்கப்பட்டிருக்கிறது. 77 பரிசோதனை நிலையங்கள் இருக்கிறது. இப்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,179. நேற்றைய தினம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1008. நேற்றுவரை இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,333 பேர். கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 326 பேர். இதில் என்னவென்றால், ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலபேர் மருந்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்களின் இறப்புதான் அதிகமாக இருக்கிறது. கேன்சர் நோய் இருந்தவர்கள். சர்க்கரை நோய் இருந்தவர்கள். இருதய நோய் இருந்தவர்கள். சிறுநீரக நோய் இருந்தவர்கள் என பல பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றவர்கள்தான் இந்த இறப்பில் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் புள்ளிவிவரத்தை கொடுக்கிறார்கள். கொரோனாவால் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதுமட்டுமில்லை. இந்தியாவிலேயே இறப்பு சதவிகிதம் நம்முடையதுதான் குறைவாக இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட நம்முடையதுதான் இறப்பு சதவிகிதம் குறைவாக இருக்கிறது.

நம்மைப் பொருத்தவரைக்கும் யார் யாருக்கெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவரகளுக்கு எல்லாம் பரிசோதனை செய்து, குணப்படுத்துவதுதான் அரசினுடைய முதல் கடமை. அதற்கு தேவையான அனைத்து வசதிகளையுமே எங்களுடைய அரசு செய்திருக்கிறது. அதுமட்டுமில்லை, அரசும் தனியாரும் சேர்த்து ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை செய்திருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் 2000 படுக்கை வசதிகளை செய்து வைத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், 5000 படுக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இதே போல, தமிழ்நாடு முழுவது இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். 3,384 வெண்டிலேட்டர் நம்மிடம் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான வெண்டிலேட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் 3,384 வெண்டிலேட்டர் நம்மிடம் இருக்கிறது. செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமித்திருக்கிறோம். இன்றைக்கு நமக்கு மருத்துவப் பணி செய்ய தேவையான அளவு மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமூகப் பரவல் உள்ளதா?

சமூகப் பரவல் என்பதே கிடையாது. ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எல்லோரையும் நாம் பரிசோதனை செய்கிறோம். தொடர்பில் உள்ளவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சமூக பரவல் என்றால் உங்கள் எல்லோருக்கும் வந்திருக்க வேண்டும். அதுதான் சமூகப் பரவல். நீங்கள் யாருமே என் முன்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. நானும் உங்கள் முன்பு பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சி ஊடகத்தினர் எல்லோரும் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இதில் ஏற்பட்டால்தான் சமூகப் பரவல். ஏதாவது ஒரு இடத்தில் தொற்று ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து தொடர்புகள் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்கிறோம். அந்த அடிப்படையில் பரிசோதனை செய்துதான் இவ்வளவு பேரை நாம் கண்டறிந்திருக்கிறோம்.

சென்னையைப் பொருத்தவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும் மக்கள் நிறைந்த ஒரு நகரம் சென்னை நகரம். சென்னையில் குறுகலான தெரு, சின்ன சின்ன தெருவாக இருக்கும். ஆர்.கே.நகர் தேர்தலின் போது நாங்கள் வீடு வீடாக ஓட்டு கேட்டு போனோம். அப்போது பார்த்தீர்கள் என்றால் வெறும் 3 அடி சந்துதான். அதில் 30 வீடு இருக்கிறது. அதனால், அங்கே ஒருவர், இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டால் அது எல்லோருக்குமே பரவிவிடுகிறது. இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாகப் பரவக்கூடிய ஒரு நோய். இது ஒரு புதிய வைரஸ் நோய். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிறப்பான திறமையின் காரணமாகத்தான் இதுவரை 19,333 பேரை குணமடையச் செய்திருக்கிறார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் தன்னையே அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பணியாற்றிய காரணத்தினால்தான் இன்றைக்கு இவ்வளவு பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்த நோய்க்கு எந்த மருந்துமே கண்டுபிடிக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலமாக சிகிச்சை அளித்து மனநிறைவு அளிக்கும்படி சேவை செய்திருக்கிறார்கள்.

மேலும், தளர்வுகள் அறிவிக்கப்படுமா? தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படுமா?

திருக்கோயில்கள் திறக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் மூட சொல்கிறார்கள். டெல்லியில் திறந்த கோயில்களை மூட சொல்கிறார்கள். கேரளாவில் திறந்த கோயில்களை மூடச் சொல்கிறார்கள்.

இவ்வாறு தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Edappadi K Palaniswami Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment