காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: முதல்வர் பழனிசாமி அறிக்கை!

தமிழ்நாட்டிற்கு சாதகமான பல அம்சங்கள் இத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ள போதிலும், அரசை குறைகூற வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று(16.2.18) இறுதித் தீர்ப்பு வெளியானது. உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு ஆண்டுந்தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், “நீர் அனைவருக்கும் போதுவானது,எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது” போன்ற சிறப்மசங்களை அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்றாலும், தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெரிய ஏமாற்றம் என்றே பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு குறித்து, முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், “ காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924ம் ஆண்டின் ஒப்பந்தங்கள் செல்லாது என்ற கர்நாடகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதே போன்று காவிரி வடிநிலப் பகுதிகளில் நீர்ப்பாசன பரப்பை 24.708 லட்சம் ஏக்கரிலிருந்து 21 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதமும் ஏற்கப்படாதது தமிழகத்திற்கு சாதகமான அம்சம்.  வரும் 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாசன உபயோகத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது  இதற்கு மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோய்விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கப்பார்க்கின்றனர்.  உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது தி.மு.க.தான். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மூத்த, திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு வாதிட்டதன் பயனாக, மாநில உரிமைகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சாதகமான பல அம்சங்கள் இத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ள போதிலும், அரசை குறைகூற வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்.

இறுதித்தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்திற்குரிய காவிரி நதிநீரை முழுமையாக பெறும் வகையில், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும் உறுதியாகவும் தமிழக அரசு மேற்கொள்ளும்”  என்று  முதலமைச்சர் அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

×Close
×Close