ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் - முதல்வர் பழனிசாமி

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இத்தொழிற்சாலைக்கான இசைவாணையினை 31.3.2018 வரை வழங்கியுள்ளது

ஸ்டெர்லைட் அலகு-2ன் விரிவாக்கப்பணிகள் துவங்கப் பட்டிருப்பதை கண்டித்து ஆலையை சுற்றியுள்ள பொதுமக்கள் அரசுக்கு புகார்களை அளித்து வருகின்றனர். இதை அரசு கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக 1996 முதல் 1998ம் ஆண்டு வரையிலான காலத்தில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், 28.9.2010 அன்று இந்த ஆலையை மூட ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, ஸ்டெர்லைட் நிறுவனம் இடைக்கால தடை பெற்றது.

தொடர்ந்து 23.3.2013ல் மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, தொழிற்சாலையை மூட அதிமுக அரசு உத்தரவிட்டது. இதன்பின், ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், தொழிற்சாலையை மூடும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாசுகட்டுப்பாடு சாதனங்கள் சரிவர இயக்கப்படுகின்றதா என்பதை வாரியத் தலைமையகத்தில் உள்ள தொடர் காற்று கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்காணிப்பு செய்ததில், மாசு காரணிகளின் அளவு, மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ள அளவீட்டிற்குள் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இத்தொழிற்சாலைக்கான இசைவாணையினை 31.3.2018 வரை வழங்கியுள்ளது. மேலும், இசைவாணையினை புதுப்பிப்பதற்கு தொழிற்சாலை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது.

அலகு 2-ன் விரிவாக்கப்பணிகள் துவங்கபட்டிருப்பதை கண்டித்து ஆலையை சுற்றியுள்ள பொதுமக்கள் அரசுக்கு புகார்கள் அளித்து வருகின்றனர். இதை அரசு கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடிவடிக்கைகளை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close