கஜ புயல் சேதம் குறித்த அறிக்கை அளிக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்

கஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000, ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 இழப்பீடு வழங்கப்படும்

கஜ புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க வரும் 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமரிடம் கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை கோர முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை :

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலா 11 அமைச்சர்களை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று இரவு நாகப்பட்டினம் அருகில் ‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. எனினும் புயலின் தாக்கத்தினால் பொருட்சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டன.

புயல் நாகப்பட்டினத்தில் 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘கஜா’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கஜா’ புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

‘கஜா’ புயல் காரணமாக வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, விவசாய பெருமக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தியுள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. இந்த சேத விவரங்களை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சுனில் பாலிவால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அமுதா திருவாரூர் மாவட்டத்திற்கும், ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது.

‘கஜா’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. சுமார் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின் சேவை பாதிக்கப்பட்டது. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 84,436 நபர்கள் இம் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

‘கஜா’ புயல் காரணமாக சேதமடைந்த படகுகளை மீன்வளத் துறை மூலம் உடனடியாக கணக்கீடு செய்து அறிக்கை அனுப்புமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை பெறப்பட்டதும், அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து கண்காணித்து ஒருங்கிணைக்க மூத்த அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் :

நாகை:

1.k.p. அன்பழகன்,
2.M.C. சம்பத்,
3. பெஞ்சமின்

தஞ்சாவூர்:

1.K.A.செங்கோட்டையன்
2.உடுமலை. ராதா கிருஷ்ணன்
3.கடம்பூர் ராஜூ.

திருவாரூர்

1.செல்லூர் ராஜு
2.K.T.ராஜேந்திர பாலாஜி.

புதுக்கோட்டை

1.M.R விஜயபாஸ்கர்.
2.K.C. கருப்பணன்,
3.G. பாஸ்கரன்

மேலும் படிக்க – தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை மையம்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close