காவிரி பிரச்சனையில் நமது உரிமை நிலைநாட்டப்படும் - முதல்வர் பழனிசாமி உறுதி!

விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள ஆறு பக்க அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவேரி பிரச்சனையில், நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும்” என்று உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு பாதகமாக இருந்த அம்சங்களை நீக்கறவு செய்து சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இடைப்பட்ட காலத்தில், தமிழக நலன் கருதி, நதிநீர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளிவரச் செய்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பாரத பிரதமர் சென்னை வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க, என்னால் நேரடியாக வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்த போதும், இதனை நேரில் வலியுறுத்தி கடிதம் அளித்தேன்.

இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், கடந்த 17 நாட்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதன் விளைவாக நாடாளுமன்றம் நடைபெறாமல் முடங்கியது.

ஆறு வாரக் கால கெடு முடிந்தவுடன், இன்று (மார்ச் 31) மூன்று மாச காலம் அவகாசம் கேட்டும், ‘திட்டம்’ எந்பதுஅ காவிரி மேலாண்மை வாரியமா அல்லது மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை அமைக்கலாம் என்ற விளக்கங்கள் கோரி, தமிழ்நாடு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பின்னர், ஒரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது ஆகும்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, தமிழ்நாட்டின் சார்பில் வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர்கள், அனுமதிக்கப்படும் நிலையிலேயே இந்த மனுவினை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறும், தெளிவான உத்தரவை மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய வகையிலும், உறுதிபட வாதங்களை எடுத்துரைக்குமாறு வழக்கறிஞர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close