கடப்பாரை மூலம் நெம்பினாலும் ஆட்சியை அசைக்க முடியாது! - ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு. அதிமுக சார்பில் 86 ஏழை ஜோடிகளுக்கு கோவையில் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் திருமண ஜோடிகளுக்கு சீதனமாக 70 வகை சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

விழாவில் துணை சபாநாயகர், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, டாக்டர். சரோஜா, கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டவும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முதலமைச்சராகியுள்ளார் பழனிசாமி. ஓராண்டு காலத்தில் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனைகளை நிகழ்த்திய உண்மையான சூப்பர் ஸ்டார் முதலமைச்சர்தான்” என்றார்.

இதற்குபின் பேசிய முதல்வர் பழனிசாமி, “ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகளை அதிமுக அரசு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது. தி.மு.க மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறி உள்ளார். கடப்பாரை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது. அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் நேற்று உரையாற்றிய ஸ்டாலின், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாக மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கிறேன். டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம்.

தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close