Advertisment

தமிழ்நாடு நாள் தேதி நவ. 1-ல் இருந்து ஜூலை 18-க்கு மாற்றம்: காரணத்தை விளக்கி அரசு அறிக்கை

CM Stalin announces Tamilnadu day on July 18: ஜூலை 18 ஆம் தேதியே இனி தமிழ்நாடு நாள்; தியாகிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இனி ஜூலை 18 ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எல்லைப் போராட்ட வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள், இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1 ஆம் நாளை எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது. தற்போது எல்லைக்காவலர்கள் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5500ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3000ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1 ஆம் நாள் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment