திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சியில் உலகத்தரத்துடன் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
/indian-express-tamil/media/post_attachments/f0034563-577.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணைய சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் தி.மு.க பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி அளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ள நிலையில், ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட இருக்கின்றன.
அடுத்ததாக பஞ்சப்பூர் பகுதியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கான பணிகளை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது சென்னை, கோவைக்கு இணையாக திருச்சி மாறப்போவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.