Advertisment

திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்க முடியவில்லை - ஸ்டாலின்

எங்களைக் குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காதவர்கள் இந்து சமய அறநிலையத் துறையைப் பற்றி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள். இவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாக ஏற்கமாட்டார்கள் – ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்க முடியவில்லை - ஸ்டாலின்

CM Stalin Tuticorin election campaign speech highlights: திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், திமுக அரசின் ஆட்சியை தென் மாநில ஊடகங்கள் மட்டுமல்லாது, வட மாநில ஊடங்களும் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை விட தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதுதான் லட்சியம் என்று கூறினார்.

பின்னர், அதிமுக ஆட்சியை போல் கணக்கு காட்டுவதற்காக அல்லாமல், திமுக அரசு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்டாலின் கூறினார்.

அடுத்ததாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைகளைப் பேசிய ஸ்டாலின் பின்னர் கடந்த திமுக ஆட்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களையும், தற்போதைய திமுக அரசு செய்த திட்டங்களையும் பட்டியலிட்டார்.

அப்போது, வீரமங்கை வேலுநாச்சியாரையும், வ.உ,.சி.யையும் பாரதியையும் டெல்லி குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் என்ன? எங்கள் தமிழ்நாட்டு வீதிகள்தோறும் அவர்கள் வலம் வரட்டும் என்று அந்த அலங்கார ஊர்தியை விடுதலைப் போராட்ட எழுச்சியோடு அனுப்பினோம் என்று கூறினார்.

பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்கள் குறித்து பேசிய ஸ்டாலின், மக்களுக்குச் சாப்பிட ரொட்டி கிடைக்கவில்லை என்ற போது, கேக் வாங்கிச் சாப்பிடட்டும் என்று ஒரு ராணி சொன்னாரே, அதைப் போல, 'துப்பாக்கிச்சூடு குறித்து நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்' என்று சொன்னவர் சர்வாதிகாரி அல்லவா? இந்த ஆட்சி மலர்ந்த இந்த எட்டு மாத காலத்தில் இதுவரை 5 அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது. சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்கள். இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்?

என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் சொல்லி இருக்கிறார். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார். தேர்தல் முடிந்து 8 மாதம்தான் ஆகி இருக்கிறது. ஆட்சி பறிபோயிருக்கிறது அவருக்கு. இந்த நிலையில் நேற்றைய தினம் பேசிய பழனிசாமி, 'அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று பேசி இருக்கிறார். அதுதான் தோற்றுவிட்டீர்களே! அதன்பிறகும் யாராலும் தோற்கடிக்க முடியாது என்றால் என்ன அர்த்தம்? ஆட்சி மாறிவிட்டது என்பதையே உணராதவராக இருக்கிறார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியின்போது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார் ஸ்டாலின், இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பேசி இருக்கிறார். நான் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்கச் சொன்னேன். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம். ஆனாலும் திசை திருப்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன.

எங்களைக் குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காதவர்கள் இந்து சமய அறநிலையத் துறையைப் பற்றி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள். இவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாக ஏற்கமாட்டார்கள்.

மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. சில கட்சிகள் வேண்டுமானால் தங்களது தோல்வியை மறைப்பதற்காக இதுபோல ஏதாவது ஒரு விவகாரத்தில் மறைந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். எங்களுக்குச் செய்வதற்கு உருப்படியான வேறு பணிகள் இருக்கின்றன. எட்டே மாதத்தில் நாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு செய்த பணிகளில் சிலவற்றை மட்டும்தான் சற்று முன்பு பட்டியலாக வாசித்தேன். அதுவே நீண்ட பட்டியலாக அமைந்துவிட்டது. ஆனால் இது எதையும் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, 'யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்பார்கள். அதைப் போல இந்த இரு யோக்கியர்களைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும். இவர்கள் ஆட்சி நடத்திய முறையைப் பற்றியும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று ஸ்டாலின் கூறினார்.

பின்னர் நீட் தேர்வு விலக்கிற்காக திமுக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பற்றி விரிவாக பேசினார்.

அடுத்ததாக, சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல்காந்தி அவர்கள் சொன்னார்கள். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் மோடி அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் என்றும் மறைந்த முப்படைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்றும் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவை விமர்சிப்பது என்பதை இந்தியாவையே விமர்சிப்பதாக அவரே திசை திருப்பிக் கொள்கிறார். ஆனால் நாட்டுக்காகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்களின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகளைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க முடியாது என்று சொன்னது யார்? குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளைவிடத் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது?

தன்னுடைய பேச்சில் பாரதியார் அவர்களின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் மோடி அவர்களுக்குப் பாரதியாரின் திருவுருவச் சிலையைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுப்பில் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல. தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

இறுதியாக, திமுக அரசின் நல்லாட்சி தொடரவும், அரசு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கவும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு தனது உரையை முடித்தார் ஸ்டாலின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment